×

மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் கலவரத்தை தூண்டிய பெண் ஆசிரியை சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை


சென்னை: கலவரத்தை தூண்டும் வகையிலும், போராட்டத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த பெண் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி. இவர், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அரசுக்கும், கல்வித்துறைக்கும் எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதில் பல பதிவுகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போராட்டத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட தூண்டும் வகையிலும் எழுதியுள்ளார். சமூகங்களுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்துள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் அரசிடம் புகார் செய்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணை நடத்திய அதிகாரிகள், அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் அவரது பதிவுகள் இடம்பெற்று இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். ஒரு ஊழியர் நடத்தை விதிகளை மீறி நக்சலைட் போல செயல்பட்டு வந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடியற்காலை, சுமார் 3 மணியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே மக்கள் சாலை மறியல். பேருந்துகள் சென்னை நோக்கியோ, கூடுவாஞ்சேரி நோக்கியோ போக இயலவில்லை. இதேபோல கல்விப் பிரச்னைகளுக்கு மக்கள் மறியல் செய்ய ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.

மாவட்டம் தோறும் பெற்றோர்களை சந்திக்கிறோம் என்று விழா எடுத்து வருகிறார்களோ, அதற்கு ஆசிரியர்களை வரவழைக்கிறார்களே, கலைத் திருவிழா நடத்துகிறார்களே, அதற்கு ஆசிரியர்களை அனுப்புகிறார்களே, அப்போது கல்வி பாதிக்கப்படாதா என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கேட்கிறார். இது நியாயமான கேள்விதான். சமவேலைக்கு சம ஊதியம் என்பது அனைவருக்குமான சமூக நீதி. அதை வழங்க இத்தனை இடையூறுகளை உருவாக்குகிறதே துறையும், அரசும். உழைக்கும் ஆசிரியர்களை மதிக்காமல், அந்த ஆசிரியர்களின் ஊதியத்தில் நீதியை நிலைநாட்டாமல் அவர்கள் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் சமூகநீதி? பாடபுத்தகங்கள் தயாரிப்பு சீக்ரெட் என்றாலும், மாநில அரசின் நிதி 40 சதவீதம், ஒன்றிய அரசின் நிதி 60 சதவீதம் வழங்குவதைப் பார்த்தால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கும் இருக்கிறதாகவும் கூட ஒரு வகையில் புரிந்து கொள்ள முடிகிறது.

கல்வியின் இணையதளப் பக்கங்களில் சில ஆளுமைகளின் காணொளிகளைப் பார்க்க முடிகிறது. கல்வியைப் பற்றி தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் பேசி, அரசி் திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பதை உறுத செய்கின்றன, காணொளிகள் அவை. அவர்கள் முயற்சி கல்வி துறையை மட்டுமே தொடர்புடைய பிரச்னையோ என்ற அளவில் சுருங்கப் பார்க்கக் கூடாது. எதிர்கால சமூகம் அரசு வேலை வாய்ப்புகளை முற்றிலும் இழப்பதற்கான பல சிக்கல்களை உருவாகும் நிலைக்கும் இந்த நியமனங்கள் அழைத்துச் செல்ல இருக்கிறது. கல்வி அமைச்சர் இது குறித்து எல்லாம் எந்த மேடைகளிலாவது பேசுகிறாரா? இறுதியில் பள்ளிகள் தனியார் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும் நிலை வெகு விரைவில் வரப்போகிறது. இவற்றை எல்லாம் கேட்க களத்தில் செயல்படும் முற்போக்கு சக்திகளோ, மற்ற அமைப்புகளோ ஆசிரியர் சங்கங்களோ, மாணவர் அமைப்புகளோ தயாராக இல்லை என்பததான் ஆகச் சிறந்த வேதனை.

கல்வித்துறையை நாசமாக்கும் வியூகங்களா தமிழ்நாட்டில் நடக்கிறது? ஆளாளுக்கு ஆசிரியர்களை ஆட்டுவிப்பதா? அவமானப்படுத்துவதா? அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? பள்ளிக் கூடங்கள் அதிகாரத்தைக் காட்டும் இடமா?, பெண்களின் பெயர்களிலும், விருதில்லை, பெண்களுக்கும் விருதில்லை. பாலின சமுத்துவம் எங்கே?. புதிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை கல்வி அமைச்சர் வெளிப்படையாக அறிவித்து விடலாம், ஒவ்வொறு நாளும் புதிய, புதிய சுற்றறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இவை அணைத்தும் தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இருப்பவையே. மாநில அரசுகளும் இவற்றை தடுக்க மறுக்கின்றன. இதை தடுக்கும் வேலையை அமைப்புகள் செய்ய முன் வரவேண்டும். தடம் மாறி, தடுமாறும் தமிழகக் கல்வி செயல்படுகிறதா கல்வி அமைச்சகம்? அதிகாரிகளுக்கும் பங்கு உண்டா?. தமிழகக் கல்வி சூழல் தடம் மாறி தடுமாறுகிறதா? விரைவில் அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா.

தமிழக கல்விச் சூழல் மரண ஓலம். ஆங்கில வழிக் கல்வியால் அவதியுறும் மாணவர்கள், பெற்றோர்கள் மீதே பழியைப் போட்டு ஆங்கில வழி வகுப்புகளை ஆட்டு மந்தைக் கூட்டமா மாற்றும் பள்ளிகள். புத்தகங்கள் மட்டுமே மாணவர்களிடம் ஆங்கில வழியில் இருக்கின்றன. அவர்கள் சிந்தனையற்றவர்களாக மாற்றப்படும் அவலம். தேர்தல் நடத்துவது செலவுதானே. அதனால அரசியல்வாதிகளையும் அவுட்சோர்சிங்ல நியமிச்சிக்கலாமா… மக்களே… சரிதானா… எல்லா ஆசிரியர்களும் லட்சத்தில் சம்பளம் வாங்குவதில்லை ஆயிரங்களுக்கே போராடும் நிலையில் ஆசிரியர்கள்.

இவ்வாறு அரசுக்கு எதிராக தொடர்ந்து 34க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டுள்ளார். அதில் சங்கங்கள், மாணவர்கள், பொதுமக்களை போராட தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செயல்படும் ஒரு ஆசிரியை, மாணவர்களையும் போராட்டக் களத்தில் இறக்கிவிட்டால், மாணவர்களின் வாழ்க்கை எண்ண ஆகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு, ஆசிரியை உமாமகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. விஷம் என்றால், அதற்கு மருந்து கொடுத்துத்தானே ஆக வேண்டும். தற்போது அரசு அதற்கான மருந்தை தற்போது கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் கலவரத்தை தூண்டிய பெண் ஆசிரியை சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Umamakeshwari ,Nellikupam Government Secondary School ,Chengalpattu District ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...